விடிய விடிய வெளுத்த மழை.. விடிஞ்ச பிறகும் முடியலையே.. 3 மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு"!

Su.tha Arivalagan
Nov 22, 2023,10:48 AM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் விடிய விடிய கன மழை கொட்டித் தீர்த்த நிலையில் காலையிலும் கூட மழை தொடர்ந்து கொண்டுள்ளது. இன்றும் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலை 9 மணிக்கு சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கேளம்பாக்கம், திருப்போரூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, பெரும்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது


தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் நிலவும் வடகிழக்கு பருவமழை காரணமாகவும், காற்றின் சுழற்சியாலும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.




தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று  ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.


தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நாளை கனமழையை எதிர்பார்க்கலாம்.


இன்று எங்கு மழை பெய்யும்:


தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை திண்டுக்கல், திருவாரூர், கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, ராமநாதபுரம் ,ஆகிய 17 மாவட்டங்களுக்களில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், பொன்னேரியில் அதிகபட்சமாக 5 செமீ மழை பதிவாகியுள்ளது.


கும்மிடிபூண்டியில் 3 செ.மீ மழையும், சோழவரம் மற்றும் செங்குன்றத்தில் தலா 1 செமீ மழையும் பதிவாகியுள்ளது