புயல் போயிருச்சு.. உற்சாகமாக கடலுக்குள் சென்ற மீனவர்கள்.. Fresh Fish வந்துட்டிருக்கு!

Meenakshi
Dec 07, 2023,12:35 PM IST

செங்கல்பட்டு: மிச்சாங் புயல் காரணமாக கடந்த 8 நாட்கள் கடலுக்கு செல்லாமல் இருந்த மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர். இதனால் புதிய மீன்கள் ஏராளமான அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். ஆனால் புயல் காரணமாக மீன்கள் போதிய அளவுக்குக் கிடைக்குமா என்ற சந்தேகம் மீனவர்களுக்கு உள்ளது.


சென்னை அருகே கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்கும் மேலாக நிலை கொண்டிருந்த மிச்சாங் புயலால் பெரும் மழையும், பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு சென்னை மற்றும்  அதன் சுற்றுப்புறங்களை கடுமையாக பாதித்து விட்டது.  இந்த பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வருகின்றனர்.


புயல் வருவதற்கு முன்பே வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக, சென்னை மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருந்து வந்தனர். இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. மீன்வரத்தும் இல்லாமல் போனது. மீனவர்கள், மீன் வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மக்களுக்கும் போதிய மீன் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.





இந்நிலையில் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மீனவர்களுக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையிலேயே மீன் பிடிக்கச் கடலு்குச் சென்றனர். புயல் காரணமாக மீன்கள் குறைவாகவே கிடைக்கும் என்பதால், குறைந்த அளவிலான விசைப்படகுகளில் மீனவர்கள்  கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.


சென்னையில் உள்ள எண்ணூர், காசிமேடு, பட்டினப்பாக்கம், உத்தண்டி உள்ளிட்ட அனைத்து கடலோரப் பகுதி மீனவர்களும் கடலுக்குள் போயுள்ளனர். அதேபோல செங்கல்பட்டு, நாகை, கடலூர்  உள்ளிட்ட மாவட்ட மீனர்களும் கடலுக்குள் போயுள்ளனர்.  8 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு இன்று தான் கடலுக்கு சென்றுள்ளனர் என்பதால் மீனவ குடும்பங்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.. மக்களும்தான்!