மெரீனா பீச், பெசன்ட் நகர் பீச்சுக்குப் போனா இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு களிக்கலாம்!
சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையிலான இன்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நேரில் கண்டு களிக்க ஒரு சூப்பர் ஏற்பாட்டை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது.
பாகிஸ்தான் சார்பில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி தெம்பான நிலையில் உள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் தான் சந்தித்த முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து வீக்கான நிலையில் உள்ளது.
இந்த இரு அணிகளும் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளன. உலகம் முழுவதும் உள்ள இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களிடையே இந்தப் போட்டி பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. போட்டியைக் காண மக்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான இன்றைய முக்கிய போட்டியை தமிழ்நாட்டு மக்கள் நேரடியாக கண்டுக்களிக்க பல்வேறு வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது.
மெரினா கடற்கரையில், விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு எதிரில் ஒரு பிரம்மாண்ட எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் போலீஸ் பூத் அருகில் எல்இடி திரை அமைக்கப்பட்டு அங்கு நேரடியாக போட்டியை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் கடற்கரைக்கு வழக்கமாகவே கூட்டம் வரும் என்பதாலும் போதிய அளவிலான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போட்டியை நேரில் கண்டு களிப்பதற்காக அதிக அளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் தேவையான முன்னேற்பாடுகளையும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இன்று காலை முதலே கடற்கரைக்கு மக்கள் வரத் தொடங்கி விட்டனர். திரைக்கு அருகில் அமர வேண்டும் என்பதற்காக இடம் பிடிக்கவும் ஆர்வம் காட்டுவதை காண முடிந்தது.