டிஸ்டர்ப் செய்யும் நாய்கள்.. சென்னை F4 கார்ப் பந்தயம் நடைபெறும் பகுதிகளில் தீவிர நாய் வேட்டை!

Su.tha Arivalagan
Sep 01, 2024,11:13 AM IST

சென்னை: சென்னையில் கார்ப்பந்தயம் நடைபெறும் பகுதியைச் சுற்றிலும் உள்ள இடங்களில் தெருவில் திரியும் நாய்களைப் பிடிக்கும் வேலையில் மாநகராட்சி ஊழியர்கள் இறங்கியுள்ளனர்.


சென்னையில் முதல் முறையாக பார்முலா 4 ஸ்ட்ரீட் கார்ப் பந்தயம் நடைபெறுகிறது. நேற்று இரவு இந்தக் கார்ப் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை சாலைகளில் பைக்குகள், ஆட்டோக்கள்தான் சீறிப் பாய்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் நேற்று இரவு  பந்தயக் கார்கள் சீறிப் பாய்ந்ததை மக்கள் ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்த்தனர்.




கார்ப் பந்தயம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், திடீரென சில நாய்கள் சாலையில் குறுக்கும் மறுக்குமாக ஓடியதால் சலசலப்பு ஏற்பட்டது. அவற்றை ஊழியர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் இன்றும் பந்தயம் நடைபெறுகிறது, இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து இன்று பந்தயத்திற்கு நாய்கள் இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக நாய்களைப் பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


பந்தயம் நடைபெறும் பகுதியையொட்டியுள்ள சாலைகளில், தெருக்களில் திரியும் நாய்களை வாகனங்களில் சென்று ஊழியர்கள் பிடித்துச் செல்கிறார்கள். 


ஏற்கனவே சென்னையில் தெரு நாய்கள் அதிக அளவில் இருப்பதால் அவ்வப்போது நாய்கள் மக்களை கடிப்பதும், அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் பிடிப்பதுமாக உள்ளனர். இந்த நிலையில் தற்போது கார்ப் பந்தயத்திற்கும் நாய்களால் தொல்லை வருவதால் மீண்டும் நாய் பிடிக்கும் வேலை முடுக்கி விடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்