கை கொடுக்கும் "அம்மா".. சூப்பர்..  தீயாய் திட்டமிட்டு வேலை செய்யும்.. சென்னை மாநகராட்சி!

Su.tha Arivalagan
Dec 06, 2023,06:54 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்க சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மிச்சாங் புயல் காரணமாக சென்னை முழுவதும் அதீத மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையே தனித்தீவாக காட்சியளித்தது. கடந்த இரண்டு நாட்களாக மீட்புப் பணியில் தமிழக அரசு, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மீட்பு துறையினர் என பலர் ஈடுபட்டு வருகின்றனர். பல தன்னார்வலர்களும், அமைப்புகளும், பொதுமக்களும் இறங்கி வேலை பார்க்கின்றனர்.




இந்நிலையில் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் உண்ண உணவும், இருக்க இருப்பிடமும் இல்லாமல் திண்டாடி வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்க சென்னை முழுவதும் உள்ள 40 அம்மா உணவகங்கள் மூலமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.


இந்த அம்மா உணவகங்களில் வைத்து உணவுகளை தயாரித்து அதை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகம் தற்போது வெகுவாக கை கொடுக்கிறது.




மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இந்தியாவிலேயே முதல் முறையாக  அமல்படுத்தப்பட்ட விலை குறைந்த உணவுத் திடடம் இது.  சாமானியர்கள் குறிப்பாக தொழிலாளர்களுக்குப் பயன் தரும் வகையில் இந்த உணவகம் தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் இது நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் தான் இத்திட்டம் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 




இந்தத் திட்டம் மக்களிடையே வெகு வேகமாக பிரபலமானது. இதையடுத்து, இதன் வெற்றியைப் பார்த்து விட்டு, தற்போது இத்திட்டத்தை ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், கர்நாடக மாநிலம் போன்ற மாநிலங்களும் பின்பற்று வருகின்றன.



கூலித் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், சுமை தூக்குவோர் என குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இடையில் இந்த உணவகங்களை மூடப் போவதாக ஒரு செய்தி கிளம்பியது. ஆனால் திமுக அரசு அதை மறுத்தது. தொடர்ந்து இந்த உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது வெள்ள பாதிப்பிலும் மக்களுக்கு இது கை கொடுத்துள்ளது. அம்மா உணவகங்களை உணவு தயாரிக்கும் கூடங்களாக பயன்படுத்தி வரும் சென்னை மாநகராட்சியின் சமயோஜிதம் பாராட்டுக்குரியது.