சென்னைவாசிகளே.. மாட்டை உள்ளேயே பத்திரமா கட்டி வைங்க.. அபராதத்தை ஏத்திருச்சு மாநகராட்சி!

Meenakshi
Jul 30, 2024,03:13 PM IST

சென்னை:   சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கான அபராதத்தை உயர்த்தி சென்னை மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


சென்னை சாலைகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என மாநகராட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாடுகள் அதிகளவில் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், பல்வேறு விபத்துகளும் நடைபெறுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுமட்டும் இன்றி சாலைகளில் செல்லும் சிறுவர்கள், பெரியோர்களை மாடுகள் முட்டி தாக்குகின்றன.




மாடு முட்டி சிறுமி படுகாயம், மூதாட்டி காயம் போன்ற செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்படுவதும் உண்டு. முன்னர் எல்லாம் சாலைகளில் திரியும் மாடுகளை அதிகாரிகள் பிடித்தால் 5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.


தற்போது இந்த நிலை மாறி சென்னை சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் முதல் முறைப்படிப்பட்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை 10,000 அறிவிக்கப்பட்டுள்ளது. அதே மாதிரி இரண்டாவது முறை பிடிக்கப்படும் போது மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை 15,000 என்றும், மேலும் பராமரிப்பு செலவுக்காக மாடு ஒன்றுக்கு ஆயிரம் என கூடுதலாக வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித் தெரியும் மாடுகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.