சென்னை பீச்.. தூய்மை பணியை தனியாருக்கு வழங்க..மாநகராட்சி முடிவு..!

Manjula Devi
Feb 27, 2025,03:54 PM IST

சென்னை: சென்னையில் உள்ள மெரினா, பட்டினப்பாக்கம், உள்ளிட்ட ஐந்து கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


 மக்கள் விடுமுறை தினங்களில் தங்கள் பொழுதினை கழிக்க சிறந்த இடமாக சென்னை கடற்கரைகள் உள்ளன ‌. இங்கு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்கள் பொழிதினை கழித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கடல் அலைகளை ரசித்தும் கடல் காற்றை வாங்கவும், கடற்கரைகளில் அமர்ந்து கொண்டு  உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகள் சாப்பிட மக்கள் விரும்புகின்றனர்.  


அப்படி ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் மக்கள் கூடும் போது உணவு கழிவுகள், பாலித்தீன் கவர்கள், என அங்கு அதிகளவு குப்பைகள் சேர்ந்து விடுகின்றன. இந்த குப்பைகள் காற்றில் பறந்து கடலுக்குள் செல்வதால், நீர் வளத்தை கெடுக்கிறது.  அதே போல் மக்காத பாலித்தீன் போன்ற குப்பைகளை கண்ட இடங்களில் போடுவதால் மண் அதன் தன்மையை இழந்து விடுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் வேண்டாத குப்பைகளையும் கழிவுகளையும் அவ்வப்போது அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.




இந்த நிலையில், சென்னையில் உள்ள மெரினா, பட்டினபாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரை ஆகிய ஐந்து கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, மெரினா கடற்கரையில் ஒரு வருடத்திற்கு தூய்மைப் பணியை மேற்கொள்ள ரூபாய் 7.9 கோடிக்கும்,  மற்ற 4 கடற்கரையில் ரூபாய்  4.54 கோடிக்கும் ஒப்பந்தம் விட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 372  முக்கிய இடங்களில்  பராமரிப்பு பணிகள் மற்றும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்காக கடந்த ஒரு வருடமாக பரிசோதனை அடிப்படையில் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.