சென்னை மாநகராட்சி பட்ஜெட்: 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஷூ, சாக்ஸ்..!
சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பட்ஜெட்டைத் தாக்கல் செய்து மேயர் பிரியா ராஜன் வெளியிட்டு முக்கிய அறிவிப்புகள்:
2024 -25 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் மொத்தம் 419 பள்ளிகளில் பயிலும் எல்கேஜி வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு தலா இரண்டு எண்ணிக்கை வீதம் 1,20, 175 மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்படும்.இதற்காக மொத்தம் 8.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சிசிடிவி
வரும் கல்வி ஆண்டில் சென்னையில்117 தொடக்கப்பள்ளிகள் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட மண்டலங்களில் இணைக்கப்பட்ட 138 பள்ளிகள் என ஆக மொத்தம் 255 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி ஒன்றுக்கு தலா 4சிசிடிவி கேமராக்கள் பொருத்த 7.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலனி வழங்குதல்
2024-25 ஆம் கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலனி மற்றும் இரண்டு ஜோடி காலுறைகள் வழங்க 3.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு வண்ணப் பலகைகள் வழங்குதல்
208 தொடக்கம் மற்றும் 130 நடுநிலை பள்ளிகளில் மொத்தம் 338 பள்ளிகளுக்கு தலா ஐந்து பச்சை வண்ண பலகைகள் வழங்க 92.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெம் பயிற்சி வழங்குதல்
சென்னை நுங்கம்பாக்கம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சயின்ஸ் டெக்னாலஜி இன்ஜினியரிங் மேத்தமேடிக்ஸ் அகாடமி ஆப் எக்சலன்ஸ் பயிற்சி பள்ளி கடந்த 2021-2022 கல்வி ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் நல்ல வரவேற்புரை பெற்றதால் இத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஸ்டெம் பயிற்சி வழங்க ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024 -2025 ஆம் கல்வி ஆண்டில் இணைக்கப்பட்ட பள்ளிகள் உட்பட 208 சென்னை தொடக்கப்பள்ளிகளுக்கு தலா ரூபாய் 25,000 வீதம், 130 சென்னை நடுநிலை பள்ளிகளுக்கு தல 30000 வீதம், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் என 81 பள்ளிகளுக்கு தலா 50,000 வீதம், என பள்ளிகளில் ஏற்படும் சிறு பராமரிப்பு செலவுகளையும், இதர செலவினங்களையும் மேற்கொள்வதற்கு இம் பிரஸ்ட் அமௌன்ட்( im-prest amount) வழங்க ரூபாய் 1.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்துதல்
ராயப்பேட்டையில் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது .இத்தொழில் பயிற்சி நிலையத்தில் உள்ள இரண்டு வகுப்பறைகள் புதிதாக கட்டப்படும். மற்ற அறைகள் பழுது பார்க்கப்படும் .இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும். மாணவர்களுக்கு மிதிவண்டி, சீருடை மற்றும் எக்ஸ்டர்னல் ஸ்கில் ட்ரைனிங் (outside )
அளிக்கப்படும். இதற்காக ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூகப்பணியில் உள்ள மாணவர்களுக்கு சீருடை வழங்குதல்
35 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய மாணவர் படை (NCC) சாரண சாணியர் இயக்கத்தில் (Scout and Guidance) தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பயிற்சி பெற்று வரும் 2050 மாணவர்களுக்கு சீருடைகள் வழங்க ரூபாய் 66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடையாள அட்டை வழங்குதல்
2024 -25 ஆம் கல்வி ஆண்டில் சென்னையில் உள்ள 419 பள்ளிகளில் பயிலும் 1,20,175 மாணவர்களுக்கு தன் விவரக் குறிப்பினை அறிந்து கொள்ளவும் மற்றும் பாதுகாப்பிற்காகவும் வண்ண அடையாள அட்டை( Id card)வழங்க ரூபாய் 61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சி வசதிகள்
ஆழ்வார்பேட்டை மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வரும் இரண்டு சமுதாய கல்லூரிகளில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சி அளிக்க பயிற்றுநர் ஊதியம்,பயிற்சிக்கான பொருட்களை கொள்முதல் செய்ய, ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா அழைத்துச் செல்லுதல்
மாணவர்கள் தம் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக நடப்பு கல்வியாண்டில் சென்னையில் உள்ள 208 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 130 நடுநிலைப்பள்ளிகளில் 4 மற்றும் 5 வகுப்பு பயிலும் 24,700 மாணவர்களை சென்னையை சுற்றியுள்ள இடங்களுக்கு பள்ளி சுற்றுலா அழைத்துச் செல்ல ரூபாய் 47.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.