சென்னையில்.. ரூ. 5 கோடி செலவில்.. புதுப்பொலிவு பெறும்.. அம்மா உணவகங்கள்.. மேயர் அறிவிப்பு

Manjula Devi
Jun 14, 2024,06:49 PM IST

சென்னை:   சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும்,அதன் தரத்தை அதிகரிக்கவும் ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா  ராஜன் அறிவித்துள்ளார்.


கடந்த 2013 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை சென்னையில் தொடங்கி வைத்தார். இங்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்குவதால் ஏழை எளிய மக்கள் குறிப்பாக தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் பெரும் பயனடைந்தனர். சென்னையில் இது வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பின்னர், அம்மா உணவகங்கள் தமிழ்நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட்டது.




இங்கு இட்லி, சாம்பார் சாதம், பொங்கல், லெமன், தயிர், கருவேப்பிலை சாதம், சப்பாத்தி போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அம்மா உணவகங்களை நம்பி பல்வேறு கூலி தொழிலாளர்கள் உள்ளனர். அதிலும் கொரோனா காலத்தில் ஏழை மக்களின் பசிப்பிணியை போக்க ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது அம்மா உணவங்கள்தான்.


சென்னை மாநகராட்சியில்  மொத்தம் 399 அம்மா உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை தனிப்பட்ட மனிதனின் பசியை போக்கிக் கொள்ள மலிவு விலையிலான உணவுகளை வழங்கி வருகிறது. தற்போது உள்ள திமுக ஆட்சியில் இந்த அம்மா உணவகங்களை மூடப் போவதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும் அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை.  இந்த நிலையில்  சென்னை மாநகராட்சியில் உள்ள 399 அம்மா உணவகங்களையும் புதுப்பொலிவாக்கி ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐந்து கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியுள்ளார்.


இதுதொடர்பாக மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:




அம்மா உணவகங்களில் தொடர்ந்து புகார் எழுந்துள்ள நிலையில் மாநகராட்சிக்கு அவப்பெயா் ஏற்பட்டுள்ளதால் அந்தந்த மண்டல நிர்வாகிகள் பொறுப்பேற்க வேண்டும். அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்குவதால் ஆண்டுக்கு சென்னை மாநகராட்சிக்கு 140 கோடி செலவாகிறது. இதன் உள்கட்டமைப்பு பணிகளான வண்ணம் பூசுதல், கட்டடங்களை சீரமைத்தல்,உள்ளிட்ட பணிகளை மேம்படுத்தி அம்மா உணவகங்களை புதுப்பொலிவுடன் மாற்ற வேண்டும். 


அங்கு பயன்படுத்தப்பட்டு வரும் பழுதான பழைய மிக்சி, கிரைண்டர், சமையல் உபகரணங்கள் போன்ற பொருட்களை மாற்ற வேண்டும். இது தவிர அம்மா உணவகங்களில் ஏற்கனவே வழங்கப்படும் உணவு வகைகளில், ருசியான புதிய வகை ‌உணவுகளை அறிமுகப்படுத்தி தரத்தை அதிகரிக்க  வேண்டும்‌. 


இதற்கான பணிகளை அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் முழுமையாக நேரில் கண்காணித்து முறையாக செயல்படுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.