சென்னையில்.. சட்டென்று மாறிய வானிலை.. திடீரென வெயில் குறைந்தாதல்.. குழப்பத்தில் மக்கள்!

Manjula Devi
Sep 19, 2024,12:15 PM IST

சென்னை:   சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி எடுத்த நிலையில் இன்று காலை முதல் வெயில் இல்லாமல் கருமேகங்கள் சூழ்ந்து ஒரு மாதிரியான வானிலை நிலவுகிறது. மழை வருமா என்றும் தெரியவில்லை. அதேசமயம், புழுக்கத்திற்கும் குறைவில்லை.


தமிழ்நாட்டில் கோடை வெயில் காலம் மே மாதமா அல்லது செப்டம்பர் மாதம் என மக்கள் குழம்பும் அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக மே மாதத்தை காட்டிலும் தற்போது செப்டம்பர் மாதத்தில் நேற்று பரவலாக பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியை தாண்டியும கொளுத்தி எடுத்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவிர்த்து வருகின்றனர். அதே சமயம் அனல் காற்றால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். 




மிரண்டு போன மதுரை:


அந்த வகையில் மதுரையில் அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹூட் வெயில் சுட்டெரித்தது. மதுரையின் வரலாற்றில் கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக செப்டம்பர் மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகி மதுரை மக்களை மிரட்டி விட்டது. அதேபோல் மதுரை மத்தி, பரமத்தி, கரூர், அதிராம்பட்டினம், தஞ்சை, திருச்சி, ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியை தாண்டியும் வெயில் கொளுத்தியது. 


திகைக்க வைத்த சென்னை: 


சென்னையிலும்  வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. செப்டம்பரில் இதுவரை இல்லாத அளவுக்கு அங்கும் வெயில் வெளுத்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் வீசும் அனல் காற்றில் குழந்தைகள், முதியோர்கள், கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக கூறி வருகின்றனர். இதனால் மீண்டும் பழ சாறு, இளநீர், தர்பூசணி போன்றவற்றை பயன்படுத்தி பழ சாருகளை அருந்தி தாகம் தணித்து வருகின்றனர். மேலும் சில நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் கவலை அடைந்து வருகின்றனர்.


மாறிய வானிலை:


சென்னையில் வெப்ப சலனத்தால் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென மேகங்கள் இருண்டு பெரிய மழை பொழியக்கூடிய பருவநிலை போன்று மாறியது. வெயில் இவ்வளவு வாட்டி எடுத்த நிலையில்  தற்போது வெயிலே இல்லாமல் திடீரென இப்படி கருமேகங்கள் சூழ்ந்து  இருக்கிறதே என மக்கள் குழப்பம் அடைந்தனர். ஆனாலும் மழை இதுவரை இல்லை. மேலும் புழுக்கமும் குறையவில்லை.


மிஸ்டர் வருணன்.. ஏதாவது வச்சு செய்யக் காத்திருக்கிறாரா.. தெரியலையே!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்