காரை காப்பாத்த.. எங்களுக்கு வேற வழி தெரியலை ஆத்தா.. பாலங்களை தேடி ஓடும் சென்னைவாசிகள்!

Aadmika
Oct 15, 2024,10:21 AM IST

சென்னை :   சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கார்களை காப்பாற்றிக் கொள்வதற்காக மேம்பாலங்களை தேடி சென்னைவாசிகள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட சென்னையில் உள்ள எல்லாப் பாலங்களிலும் கார்களை நிறுத்த ஆரம்பித்துள்ளனர் மக்கள்.


சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 16,17 ரெட் அலர்ட், அக்டோபர் 19ம் வரை தொடர்ந்து மழை இருக்கு என வானிலை மையமும், தமிழ்நாடு வெதர்மேனும் மாறி மாறி அப்டேட் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் தமிழக அரசும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புயல் வேகத்தில் மேற்கொண்டு வருகிறது. 




வழக்கமாகவே சென்னையில் மழைக்காலத்தில் மக்களிடையே இயல்பாகவே ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ளும். காரணம் ஊரின் அமைப்பு அப்படி. லேசான மழை பெய்தாலே கூட தண்ணீர் தேங்கி விடும். காரணம், சென்னை நகரம் தட்டையான நிலப்பரப்பு கொண்டது. தண்ணீர் வடிய நேரமாகும். எனவேதான் பெருமழைக்காலங்களில் பெரும் பாதிப்பை நாம் சந்திக்க நேரிடுகிறது.


மற்ற மாதங்களில் மழை என்றால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சென்னையை பொறுத்தவரை நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழை எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சென்னை மக்கள் நன்கு உணர்ந்து விட்டார்கள். கடந்த ஆண்டு பெய்த மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொருட்களின் சேதத்தையே இன்னும் ஈடுகட்ட முடியாமல் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே ரெட் அலர்ட் வந்துள்ளது.


இதனால் சுதாரித்துக் கொண்ட சென்னை மக்கள் தங்களின் கார்களை மேம்பாலங்களின் மீது சாலையோரங்களில் பார்க் செய்து வருகின்றனர். ஓரமாக பார்க் செய்ய, பத்திரமாக காரை நிறுத்த பலரும் வரிசை கட்டி காத்திருக்கிறார்கள். போக்குரவத்திற்கு இடையூறாக இருப்பதால் பாலங்களில் காரை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் ஆரம்பத்தில் எச்சரித்தனர். ஆனால் தற்போது மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அபராதம் விதிக்க மாட்டோம் என்று கூறி விட்டனர். அதேசமயம், போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் கார்களை பார்க் செய்யுமாறு மக்களுக்கு அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். 


இதனால் சென்னை வாசிகள் தற்போது பாலங்களை நோக்கி தங்களின் கார்களை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். வேளச்சேரி பாலத்தில்தான் இதை முதலில் ஆரம்பித்தார்கள். பின்னர் பள்ளிக்கரணை பாலத்திற்கும் கார்கள் பார்க் செய்ய ஆரம்பித்தனர். இப்போது கிட்டத்தட்ட சென்னையில் முக்கியமான பாலங்களில் எல்லாம் கார்களை நிறுத்த தொடங்கியுள்ளனர். இதனால் பாலங்கள் எல்லாம் தற்காலிக கார் பார்க்கிங்காக மாறி வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்