Weather Forecast: அடுத்த 2 நாட்களுக்கு 2 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரிக்கும்.. வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு 2 டிகிரி வரை அதிகபட்ச வெப்ப நிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போதே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. வெளியில் செல்லவே தயங்கும் அளவுக்கு வெயில் வறுத்தெடுக்கிறது. இந்த நிலையில் இன்று முதல் 2 நாட்களுக்கு வழக்கமான அளவிலிருந்து 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு விவரம் வருமாறு:
29ம் தேதி முதல் 30ம் தேதி வறண்ட வானிலையே நிலவும். சராசரி அதிகபட்ச வெப்ப நிலை சில இடங்களில் 1 முதல் 2 டிகிரி வரை அதிகரித்துக் காணப்படும்.
31ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். அதேசமயம், சில இடங்களில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வெயில் 99 டிகிரி முதல் 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்ப நிலையில் உயர்வு காணப்படும் என்பதால் வெளியில் செல்வோர் மிகுந்த கவனத்துடன், முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது. அதிக நேரம் வெயிலில் இருக்காமல் பார்த்துக் கொள்ளவும். அதிக அளவில் தண்ணீர், இளநீர், ஜூஸ் போன்றவற்றைக் குடிக்கவும். மோர் குடிப்பது நல்லது.