அடடா மழைடா அடை மழைடா.. சென்னை, புறநகர்களில் காலை முதல் விடாமல் கொட்டித் தீர்க்கும் மித மழை..!
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் காலை முதலே மழை விடாமல் பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி தற்போது வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று கனமழை:
திருவள்ளூர்,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மிதமான மழை:
நாளை வடகடலோர தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம்.
20.12.2024 முதல் 24.12. 2024 வரை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மழை:
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும். அவ்வப்போது மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் காலை முதலே மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையாகவும், சில இடங்களில் மித மழையாகவும் விடாமல் பெய்து வருவதாலும் இதமான வெப்ப நிலை சூப்பராக இருக்கிறது. கடும் குளிர் சற்று விலகி தற்போது மழைச் சூழல் படு ரம்மியமாக இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்