Good Evening Chennai: சென்னையில் ஜில் ஜில் மழை.. 3 மணி நேரத்தில்.. 13 மாவட்டங்களில்.. மழை வாய்ப்பு!
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் மாலையில் சூப்பரான மழை பெய்து மக்களைக் குளிர்வித்தது. குறிப்பாக தென் சென்னை புறநகர்களில் பரவலாக மழை பெய்தது. அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மாலை இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. குறிப்பாக நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனை அடுத்து இன்று வடதமிழகப் பகுதிகளான சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று மாலையில் சென்னை புறநகர் பகுதிகளான சேலையூர், செம்பாக்கம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. அதேசமயம் நகரின் பிற பகுதிகளில் மழை இல்லை. சில இடங்களில் லேசான தூறலமே காணப்பட்டது.
திடீரென பெய்த இந்த மழையால் மக்கள் ஹேப்பி ஆனார்கள். அதேசமயம், திடீர் மழையை எதிர்பாராமல் பலர் நனையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதேசமயம், பள்ளிக்குழந்தைகள் மழையை ரசித்தபடி நனைந்து சென்றனர்.
அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை வாய்ப்பு:
இதற்கிடையே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் சென்னை பகுதிகளில் பரவலாக இன்று மழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நகரின் பிற பகுதிகளிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரவு 7:00 மணிக்குள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, திண்டுக்கல், கோவை, ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்