Chennai Metro:சென்னை விமான நிலையம் டூ' கிளாம்பாக்கம் மெட்ரோ சேவை.. கிடைத்தது ஒப்புதல்!

Meenakshi
May 08, 2024,06:35 PM IST

சென்னை: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஓப்புதல் தொடர்பான கோப்பு,  நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை மக்கள்  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதத்தில் கொண்டு வரப்பட்டது தான் மெட்ரோ ரயில் திட்டம். இத்திட்டம் சென்னை வாசிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மெட்ரோ சேவையின் மூலம் 80.87 லட்சம் பயணிகள் பயணடைந்து உள்ளனர். இத்திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட உள்ளது.


தினசரி  3 லட்சம் பயணிகளால் பயன்படுத்தப்படும் சென்னை மெட்ரோ ரயில், அதன் 2வது கட்டமாக 119 கி.மீ தூரம் 3 வழித்தடங்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் ரூ.63,246 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. பூந்தமல்லி முதல்  கோடம்பாக்கம் வரை இடையிலான பாதை, 2025 டிசம்பரில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. 




அடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வரை ஒரு மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  இந்த மெட்ரோ திட்டத்திற்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் மத்திய அரசின் ஒப்பதலுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என தெரிகிறது. 


கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறக்கப்பட்டு பஸ் போக்குவரத்து நெரிசல் சென்னை நகருக்குள் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழு அளவிலான வெற்றி பெற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில் நிலையமும் வந்து விட்டால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். மெட்ரோ தவிர, புறநகர் ரயில் நிலையமும் அங்கு விரைவில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.