மெரீனா பீச் விமான சாகசம்.. சென்னை மெட்ரோவுக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களான ரபேல், தேஜாஸ் உள்ளிட்ட 72 போர் விமானங்கள் மூலம் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியினை காண பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்திருந்தனர். கூட்டம் அதிகமாக வரும் என்பதால், பல்வேறு முன் ஏற்பாடுகளும் அரசு சார்பில் செய்யப்பட்டிருந்தது.இந்த விமான சாகச நிகழ்ச்சியினை காண பல லட்சக்கணக்கான மக்கள் நேற்று மெரினாவில் திரண்டிருந்தனர். அதி்க அளவில் மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி சாதனை படைத்துள்ளது.
இந்த கூட்டத்தை எதிர் கொள்ள கூடுதல் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதன்படி மெட்ரோ நிர்வாகமும் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது. நேற்று விமான சாகசத்தை காண மெட்ரோ ரயில்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. இதனால் கூடுதல் ரயில்களை மெட்ரோ இயக்கியது. ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியதால், வண்ணாரப்பேட்டை-டிஎம்எஸ் மெட்ரோ இடையே 3.5 நிமிட இடைவெளியிலும், விம்கோ நகர்-விமான நிலைய மெட்ரோ தடத்தில் 7 நிமிடத்திற்கு ஒரு ரயிலிலும் இயக்கப்பட்டன.
வழக்கமாக ஞாயிற்று கிழமை அன்று 1.7 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வார்கள். ஆனால் நேற்று நடந்த விமான சாகசத்தை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு முன்பாக கடந்த செப்டம்பர் 6ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஒரே நாளில் 3,74,087 பேர் சென்னை மெட்ரோவில் பயணம் செய்திருந்தனர். இந்நிலையில், மெட்ரோவின் முந்தைய சாதனை நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 4 லட்சம் பயணம் செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்