செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் பத்திரமாக மீட்பு.. சு. வெங்கடேசன் மகிழ்ச்சி.. நன்றி!

Su.tha Arivalagan
Dec 19, 2023,09:59 PM IST

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக சிக்கித் தவித்து வந்த ரயில் பயணிகள் அனைவருமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் மகிழ்ச்சியும், இதற்காக பாடுபட்ட அத்தனை பேருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில், ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து 7 பேருந்துகளில் 553 பயணிகள் மணியாச்சி வந்து சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


இது தவிர இரண்டு பேருந்து மற்றும் ஒரு டிரக் வண்டியில் பயணிகள் மணியாச்சி வந்து கொண்டிருக்கின்றனர். வரும் வழியில் ரெட்டியார்ப்பட்டியில் அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. 




இவர்களும் மணியாச்சி வந்து சேர்ந்ததும், மணியாச்சியிலிருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் புறப்படும். அந்த ரயில், செந்தூர் விரைவு வண்டி எந்த நிறுத்தத்தில் எல்லாம் நிற்குமோ அந்த நிறுத்தத்தில் எல்லாம் நின்று செல்லும். 


ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்த 687 பயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர் என்ற மகிழ்வான செய்தி வந்து கொண்டிருக்கிறது. அடுத்த சுமார் இரண்டு மணி நேரத்தில் சிறப்பு இரயில் மணியாச்சியிலிருந்து புறப்பட இருக்கிறது. பயணிகளை மீட்க கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது போராடிய ரயில்வே மற்றும் வருவாய்த்துறையின் அனைத்து ஊழியர்களுக்கும், பேரிடர் மேலாண்மைக்குழு வீரர்களுக்கும், எல்லா வகையிலும் கவனப்படுத்திய ஊடக நண்பர்களுக்கும் தலை தாழ்ந்த வணக்கம் என்று கூறியுள்ளார் வெங்கடேசன்.