3 நாட்களாக.. பிரான்ஸ் நாட்டில் தடுக்கப்பட்ட விமானம்.. 276 பயணிகளுடன் இந்தியா திரும்பியது!

Manjula Devi
Dec 26, 2023,10:44 AM IST

மும்பை: பிரான்ஸ் நாட்டில் 303 இந்தியர்களுடன் தரையிறக்கப்பட்ட விமானம், பல்வேறு விசாரணைகளுக்குப் பின்னர் இந்தியா திரும்ப அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து 276 பயணிகளுடன் அந்த விமானம் மும்பைக்கு இன்று வந்து சேர்ந்தது.


மும்பை வந்து சேர்ந்த பயணிகளிடம் தனித் தனியாக குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


அரபு நாடான துபாயிலிருந்து வெள்ளிக்கிழமை 303 இந்திய பயணிகளுடன் ஏ340 விமானம் நிகராகுவா நாட்டிற்கு கிளம்பிச் சென்றது. இது தனியார் சார்ட்டட் விமானம் ஆகும். இந்த நிலையில், பிரான்சில் எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் தரையிறக்கப்பட்டது. தரையிறக்கப்பட்ட விமானத்தை மீண்டும் கிளம்பிச் செல்ல பிரான்ஸ் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.




இந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.  விமானத்தில் பயணித்த 303 பயணிகளுடன் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தியர்களில் ஒரு சிலர் மட்டும் தமிழ் பேசுவதாகவும், பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.


அதில் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளதாக  கூறி அந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.   

கடந்த மூன்று நாட்களாக இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் விமானம் இந்தியா புறப்பட்டுச் செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதில் 27 பேர் தொடர்ந்து பயணிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டனர். இதையடுத்து மற்ற 276 பேருடன் விமானம் புறப்பட்டுப் போக அதிகாரிகள் அனுமதித்தனர்.


இதையடுத்து விமானம் இன்று காலை மும்பை வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் பயணித்த 10 சிறுவர்கள் மட்டும் பெற்றோர்கள் இல்லாமல் பயணித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமான பிரச்சினை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். பிரெஞ்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.