விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்த வந்தபோது.. விஜய் மீது செருப்பு வீச்சு.. போலீஸில் புகார்!

Meenakshi
Jan 04, 2024,07:21 PM IST
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் மீது  செருப்பு வீசிய சம்பவம் தொடர்பாக, தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காலமானார். இதை அடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். இதை அடுத்து அவரது உடல் தொண்டர்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் இயங்கி வரும் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொண்டர்கள் அங்கு அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 



விஜயகாந்தின் மீது பொது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை எவ்வளவு என்பதை அவர் இறப்பிற்கு வந்த கூட்டம் தான் சாட்சி. அவர் செய்த தான தர்மங்கள், உதவிகள் எண்ணிலடங்காதவை என்றே செல்ல முடியும். அதனால் தான் அவர் இறப்பிற்கு இவ்வளவு கூட்டம் வந்தது என்றே கூறலாம். பொது மக்கள் ஒருபுறம், கட்சித் தொண்டர்கள் ஒருபுறம். அதுமட்டுமா அவருடன் திரைத்துறையில் பனியாற்றிவர்கள் என லட்சக்கணக்கில் கூட்டம் கூடியது.  

இப்படி ரசிகர்கள், தொண்டர்கள், பிரபலங்கள் என எல்லோரும் ஒரே வழியில் அனுப்பப்பட்டனர். அங்கு கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், அன்று நடிகர் விஜய் இரவு விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். வரும்போதே கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார். எப்படியோ விஜயகாந்தின் உடல் அருகே வந்து அஞ்சலி செலுத்தி விட்டு அவர் கார் அருகே சென்றார். அப்பொழுது, யாரோ ஒருவர் விஜய் மீது செருப்பை வீசினார்.  நல்லவேளையா விஜய் மீது செருப்பு படவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்தால், அங்கு சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. இது குறித்த வீடியோ வெளியாகி விஜய் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செருப்பு  வீசிய சம்பவம் ரசிகர்களை கடுமையாக பாதித்துள்ளது. துக்க வீட்டில் இது போன்ற அநாகரிகமான செயலில் ஈடுபட்ட நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.