"சந்திரயான் 3.. பத்திரமாக இறங்க வேண்டும்".. மொத்த பிரார்த்தனையும் பலித்தது..!
Aug 23, 2023,07:21 PM IST
டெல்லி: இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பத்திரமாக நிலவில் கால் பதிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியர்களும் நேற்று முதல் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அது இன்று பலித்து விட்டது.
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என சகல மதத்தினரும் பிரார்த்தனையிலும், வழிபாடுகளிலும், சிறப்பு யாகங்கள் வளர்த்தும் வேண்டுதலில் ஈடுபட்டிருந்தனர்.
பல்வேறு ஊர்களிலும் இஸ்லாமியர்கள் சிற்பபு தொழுகை நடத்தியுள்ளனர். சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற வேண்டும். விக்ரம் லேண்டர் பத்திரமாக தரையிறங்க வேண்டும். இந்தியா விண்வெளி அறிவியலில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று அவர்கள் தொழுகை மூலம் வேண்டிக் கொண்டனர்.
இதேபோல பல்வேறு சர்ச்சுகளிலும் கூட சிறப்புப் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று பல்வேறு ஊர்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதேபோல இந்துக்களும் சிறப்பு வழிபாடுகள், யாகங்கள் மூலமாக சந்திரயான் 3 விண்கலம் பத்திரமாக தரையிறங்க வேண்டி வந்தனர். பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலர் விக்ரம் லேண்டர் பத்திரமாக தரையிறங்கினால் நேர்த்திக்கடனும் வேண்டிக் கொண்டு வந்தனர்.
இன்று அனைத்துப் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளில் விக்ரம் லேண்டர் தரையிறங்��ும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பினர். பிரிக்ஸ் மாநாட்டுக்காக தென் ஆப்பிரிக்கா போயுள்ள பிரதமர் நரேந்திர மோடியும் ஆன்லைனில் இதை பார்த்து மகிழ்ந்தார். ஒட்டுமொத்த இந்தியர்கள் மட்டுமல்லாமல், உலக நாடுகளும் கூட இந்த நிகழ்வை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தன. இந்தியாவின் வெற்றி நிச்சயம் உலக அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்அத்தனை பேரின் வேண்டுதல்களும், பிரார்த்தனையும், பலித்து இந்தியா நிலவைத் தொட்டுப் பிடித்து சாதனை படைத்துள்ளது..மிகப் பெரிய வரலாறு படைத்து விட்டது.