"தென் நிலவில்" சல்ஃபர், ஆக்சிஜன் உள்ளது.. கண்டுபிடித்தது பிரக்யான்.. இ ஸ்ரோ  தகவல்!

Aadmika
Aug 30, 2023,10:03 AM IST
டெல்லி : நிலவின் தென் பகுதியில் சல்ஃபர் இருப்பதை சந்திரயான் 3 ன் பிரக்யான் ரோவர் கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் முனை பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற பிரக்யான் ரோவர் கடந்த சில நாட்களாக நிலவின் தென் பகுதியில் தனது ஆய்வை நடத்தி வருகிறது. பிரக்யான் ரோவர் வெளியிடும் தகவல்கள் குறித்த விபரங்களை இஸ்ரோ உடனுக்குடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.



இந்நிலையில் லேட்டஸ்டாக பிரக்யான் ரோவரில் இருந்து LIBS எனப்படும் Laser induced breakdown spectroscopy மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் இதுவரை யாரும் செல்லாத நிலவின் தென் பகுதியில் ஆக்சிஜன், கால்சியம், இரும்பு, சல்ஃபர் ஆகிய தாதுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் ஹைட்ரஜன் உள்ளதா என்பதை ஆராயும் பணிகள் நடந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் இருப்பதால், ஹைட்ரஜனும் இருந்தால் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்டமாக நடத்தப்பட்ட ஆய்வில் அலுமினியம், சல்ஃபர், கால்சியம், இரும்பு, குரோமியர், டைட்டானியம் ஆகியன கண்டறியப்பட்டன. மேலும் அளவிடும் பணிகள் நீட்டிக்கப்பட்ட போது மாங்கனீஷ், சிலிகான், ஆக்சிஜன் இருப்பது தெரிய வந்தது. ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இருக்கிறதா என்பது பற்றிய ஆய்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது என இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

LIBS கருவி என்பது ஒரு இடத்தில் லேசர் ஒளிகற்றைகளை செலுத்தி, அந்த இடத்தில் உள்ள வேதியியல் மூலக்கூறுகளை பிரித்தறிந்து சொல்லும் தன்மை கொண்டதாகும். பிரக்யான் ரோவர் நான்கு மீட்டர் தூரத்தில் பாதுகாப்பாக தனது ஆய்வு பணிகளை செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

தற்போது ப்ரக்யான் ரோவர் நடத்தி வரும் ஆய்வுப் பணிகளின் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், நிலவில் தண்ணீர் இருப்பதும் உறுதியாகி விடும். மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து மூலக்கூறுகளும் நிலவில் இருப்பது கண்டறியப்பட்டால் இந்த வரலாற்று சாதனையை செய்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.