திருப்பதி தரிசன முறையில் மொத்தமாக மாற்றமா? சந்திரபாபு நாயுடு வைத்த கோரிக்கை

Meenakshi
Oct 05, 2024,05:09 PM IST

திருப்பதி:   திருப்பதியில் விஐபி கலாச்சாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிறுத்தியுள்ளார்.


உலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வழங்கப்படும் லட்டுவை பக்தர்கள் புனித பிரசாதமாக  கருதுகின்றனர். ஆனால் அங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்துவதாக தகவல் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




கடந்த ஜூலை 17ஆம் தேதி குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு துறை அலுவலகத்தில் திருப்பதி லட்டு  சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அதில் நெய்க்கு பதிலாக மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பூதாகரமாக மாறியது.


இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 2 நாள் பயணமாக நேற்று திருப்பதி வந்துள்ளார். இதனையடுத்து பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகளுடன்  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடந்தினார். அப்போது திருப்பதி கோவிலின் புனிதம் பேணி காக்கப்பட வேண்டும். இந்த கோவிலில் கோவிந்த நாமம் மட்டுமே கேட்கப்பட வேண்டும்.மலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான தண்ணீர் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.


மேலும், மலைப்பகுதியில் தற்போது காடு அடர்த்தி 72 சதவீதமாக உள்ளது. இதனை அடுத்து 5 ஆண்டுகளில் 80 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். அடர் காடுகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும்.கோவிலில் தயாரிக்கப்படும் லட்டின் தரத்தை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும்.கோவிலில் சாமி தரிசனத்தில் விஐபி நடைமுறை பெரிய சிக்கலாகி வருகிறது. விஐபிக்களுக்கு கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மட்டும் செய்து கொடுக்க வேண்டும்.இதற்காக அதிகம் செலவு செய்யக்கூடாது.  முடிந்தவரை செலவை குறைப்பதோடு விஐபி தரிசன நடைமுறையை குறைக்க வேண்டும்.


கோவில் நிர்வாகத்தினர் அனைத்து பக்தர்களும் ஒன்று என கருத வேண்டும். தொலைதூரத்தில் இருந்து கோவில்களுக்கு வருவோரிடம் கணிவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் கோபமாக நடந்து கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்