அலர்ட் மக்களே.. மீண்டும் பரவும் கொரோனா.. சண்டிகரில் மாஸ்க் அணிவது கட்டாயம்!
Dec 23, 2023,11:45 AM IST
சண்டிகர்: மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சண்டிகரில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விடாது மக்களை துரத்தும் வைரஸாக கொரோனா உருவெடுத்துள்ளது. அலை அலையாக பரவி ஆட்டம் காட்டிய கொரோனா தற்போது கட்டுக்குள் வந்து மட்டுப்பட்டுவிட்டாலும் கூட அதன் உருவத்தை மாற்றி துரத்திக் கொண்டே வருகிறது.
தற்போது உருமாறிய கொரோனா (ஜேஎன் 1) பரவல் பரலாக அதிகரித்து வருகிறது. 640 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.2997 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த வரிசையில் தற்போது சண்டிகரும் சேர்ந்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இனி பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி மக்கள் கூடும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், உதவியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைத்து தரப்பினர்களும் முகக்கவசம் அணிவதை நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது.