வெயில் மண்டையைப் பொளக்குதா..  கவலைப்படாதீங்க.. மார்ச் 20ம் தேதி மழைக்கு வாய்ப்பிருக்காம்!

Meenakshi
Mar 14, 2024,03:44 PM IST

சென்னை: மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மார்ச் 19ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 16ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. 


இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று (14-3-2024) முதல் 19-03-2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  வரும் 20ம் தேதி அன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.




இன்று முதல் 16.03.2024 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3  டிகிரி செல்சியஸ் அதிமாக இருக்கக் கூடும். இன்று முதல் மார்ச் 18ம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மண்டையைப் பொளக்கும் வெயில்


இதற்கிடையே, தமிழ்நாட்டில்  வெயில் வெளுத்து வருகிறது. பல ஊர்களிலும் அனல் கக்க ஆரம்பித்து விட்டது வெயில் பல நகரங்களில் இப்போதே வெயில் 100 டிகிரியைத் தாண்டி அடித்து வருவதால், சம்மரில் இன்னும் அதிக உஷ்ணத்தை தாங்க வேண்டியிருக்குமே என்று மக்கள் அயர்ச்சியாகியுள்ளனர்.


அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும், தாகம் எடுக்காவிட்டாலும் கூட அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல குளிர்பானங்களை அதிக அளவில் அருந்துவதை தவிர்க்க வேண்டும். வெயிலில் போய் விட்டு வந்ததும் ஐஸ் வாட்டர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.