ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு.. 47 வாக்குகளைப் பெற்று.. சாம்பாய் சோரன் அபார வெற்றி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் சாம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு 47 வாக்குககளைப் பெற்று அபார வெற்றி பெற்றது.
பெரும்பான்மை பலத்துக்கு தேவை 41 எம்எல்ஏக்களின் ஆதரவு. ஆனால் கூடுதலாக 6 வாக்குகளைப் பெற்றுள்ளது சாம்பாய் சோரன் அரசு.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி அரசு ஹேமந்த் சோரன் தலைமையில் ஆட்சி நடத்தி வந்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் சில நாட்களுக்கு முன்பு ஹேமந்த் சோரனை பல மணி நேரம் விசாரித்தனர். விசாரணைக்கு இடையே அவர் ஆளுநர் மாளிகைக்குப் போய் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து சாம்பாய் சோரன் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இந்த அரசு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரினார் முதல்வர் சாம்பாய் சோரன். இதுதொடர்பாக நடந்த விவாதத்தில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் நீதிமன்ற அனுமதியுடன் கலந்து கொண்டு பேசினார்.
இறுதியில் நடந்த வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசுக்கு ஆதரவாக 47 வாக்குகள் விழுந்தன. அரசுக்கு எதிராக 29 வாக்குகள் பதிவாகின.