வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பு.. மத்திய அமைச்சர் தகவல்

Su.tha Arivalagan
Aug 29, 2023,04:48 PM IST

டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய  அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.


அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த விலைக் குறைப்பு சலுகை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டதாகவும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.




மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பலனடைவோருக்கு கூடுதல் சலுகைகள் வழங்கவும் மத்தி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அதாவது தற்போது ரூ. 200 அளவுக்கு மானியம் அளிக்கப்பட்டு வரும் நிலையில் அதை மேலும் ரூ. 200 கூட்டி இனிமேல் சிலிண்டருக்கு ரூ. 400 மானியமாக அளிக்கப்படும்.


இதுகுறித்து அனுராக் தாக்கூர் கூறுகையில், எல்பிஜி  சிலிண்டர்களின் விலையை ரூ. 200 குறைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும். ரக்ஷா பந்தன், ஓணம் பண்டிகைகள் கொண்டாடப்படும் இந்தக் காலகட்டத்தில் நாட்டின் பெண்களுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள கிப்ட் இது. 


நாங்கள் 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது நாடு முழுவதும் மொத்தமே 14.5 கோடி பேர்தான் சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருந்தனர். ஆனால் தற்போது இது 33 கோடியாக அதிகரித்துள்ளது. அதில் 9.6 கோடி பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.


உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் 75 லட்சம் பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கேஸ் பர்னர், முதல் சிலிண்டர் இலவசம், இலவச குழாய் ஆகியவை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.