வெளிநாட்டுப் பயணங்கள்: மோடிக்கான செலவு ரூ. 22 கோடி.. வெளியுறவு அமைச்சருக்கு ரூ. 20 கோடி!

Su.tha Arivalagan
Feb 03, 2023,09:22 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக கடந்த 2019ம் ஆண்டு முதல் இதுவரை ரூ. 22 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது.



பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளதாவது:

கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ரூ. 22.76  கோடி செலவிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக 6 கோடியே 24 லட்சத்து 31 ஆயிரத்து 424 ரூபாய் செலவிடப்பட்டது. பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுத் தொகை 22 கோடியே 76 லட்சத்து 76 ஆயிரத்து 934 ரூபாய் ஆகும். 

2019ம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கொண்ட பயணங்களுக்கான செலவு 20 கோடியே 87 லட்சத்து ஆயிரத்து 475 ரூபாய் ஆகும்.

2019ம் ஆண்டு முதல் இதுவரை குடியரசுத் தலைவர் 8 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி 21 பயணங்களை மேற்கொண்டுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 86 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

2019ம் ஆண்டு முதல் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி அதிகபட்சமாக ஜப்பானுக்கு 3 முறையும், அமெரிக்கா, ஐக்கிய  அரபு நாடுகளுக்கு தலா 2 முறையும் பயணம் செய்துள்ளார்.

குடியரசுத் தலைவரின் 8 வெளிநாட்டுப் பயணங்களில் 7 பயணங்களை ராம்நாத் கோவிந்த் மேற்கொண்டிருந்தார். தற்போதைய குடியரசுத் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஒன்று மட்டுமே. கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதி நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு என்று அமைச்சர் முரளிதரன் பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.