அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பென்ஷன்.. .மோடி அரசின் அடுத்த அதிரடி

Aadmika
Aug 25, 2024,09:59 AM IST

டில்லி : நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான பென்ஷன் திட்டத்தை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


நாடு முழுவதும் ஒரே மாதிரியான பென்ஷன் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் 90 லட்சம் வரையிலான மக்கள் பயனடைவார்கள் என சொல்லப்படுகிறது. ஒருவரின் பணி காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் பென்ஷன் வழங்குவதை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. National pension scheme (NPS) என்ற பெயரில் தற்போது இயங்கி வரும் தேசிய ஓய்வூதியத் திட்டம், Unified pension scheme (UPS)என்ற பெயரில் ஒரே மாதிரியான பென்ஷன் திட்டமாக மாற்றப்பட உள்ளது.




தற்போது தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயனடைந்து வருபவர்களும் இந்த ஒரே மாதிரியான பென்ஷன் திட்டத்திற்கு தங்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. மாநில அரசுகளும் இந்த ஒரே மாதிரியான பென்ஷன் திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளதாம். இந்த புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன் கடைசி 12 மாதங்கள் பெற்ற சராசரி சம்பள தொகையில் இருந்து குறைந்தபட்சம் 50 சதவீதம் கிடைக்கும்.


ஒருவேளை ஓய்வூதியதாரர் உயிரோடு இல்லாமல் இருந்தால், அவரது குடும்பத்திற்கு 60 சதவீதம் தொகை கிடைக்கும். கூடுதலாக, 10 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்து, பிறகு தங்கள் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.


ஓய்வு பயன், பணி ஓய்விற்கு பிறகும் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த புதிய பென்ஷன் திட்டத்தின் நோக்கம் என சொல்லப்படுகிறது. 


ரிசர்வ் வங்கி, உலக வங்கி, மாநில அரசுகள், பல்வேறு முக்கிய நிறுவனங்கள் ஆகியவற்றுடன் 100 க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் நடத்திய பிறகு இந்த புதிய திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த புதிய பென்ஷன் திட்டத்தால் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் குறித்த முக்கிய அம்சங்களை விரிவான அறிக்கையாகவும் அவர் வெளியிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்