ராமர் கோவில் திறப்பு.. ஜனவரி 22.. மத்திய அரசு அலுவலகங்களுக்கு.. அரை நாள் லீவு.. அரசு உத்தரவு!
Jan 18, 2024,06:19 PM IST
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பை ஒட்டி ஜனவரி 22 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி வரை மத்திய அரசு அலுவலகங்கள் இயங்காது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 தேதி பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 2 ஆண்டுகளாக ராமர் கோவில் கட்டட பணி வெகு வேகமாக நடைபெற்று வந்தது. இந்தக் கோவில் மொத்தம் 70 ஏக்கர் பரப்பளவில் 161 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆறு சன்னதிகள் உள்ளன. இதில் மூலவர் சன்னதியில் 3 அடி உயரத்தில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
ஜனவரி 22 இரண்டாம் தேதி இந்த சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து புனித நீர் பெறப்பட்டு அயோத்தியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வருவதற்காக தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர முன்னணி சினிமா நடிகர் நடிகையர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பல்துறை பிரமுகர்கள், முக்கிய விருந்தினர்கள், விளையாட்டு வீரர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். அவரும் ஒவ்வொரு ஊராகப் போய் கோவில்களில் சாமி கும்பிட்டு வருகிறார். தமிழ்நாட்டிலும் ராமேஸ்வரத்திற்கு வந்து புனித நீரை சேகரிக்கவுள்ளார்.