மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமோச்சனம்.. கட்டுமானப் பணிக்கு டென்டர் கோரியது மத்திய அரசு!
Aug 17, 2023,09:50 AM IST
மதுரை: மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிக்கான டென்டரைக் கோரியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்ற நம்பிக்கை மீண்டும் துளிர்த்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது. அதாவது பிரதமராக நரேந்திர மோடி பதவிக்கு வந்த 2வது ஆண்டில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. இப்போது அவரது 2வது ஆட்சியே முடியப் போகும் நிலையில் இதுவரை கட்டடம் கட்டப்படாமல் உள்ளது. இது பெரும் சர்ச்சையானது. மத்திய அரசு மீது பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.
கடந்த லோக்சபா தேர்தலின் போது, உதயநிதி ஸ்டாலின் ஒற்றைச் செங்கல்லைத் தூக்கிக் காட்டி இதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறி பிரச்சாரம் செய்தது மக்களை வெகுவாக கவர்ந்தது. பாஜகவினரால் இதை சமாளிக்க முடியவில்லை. இதுவும் கூட தென் மாவட்டங்களில் பாஜகவுக்கு பெரும் தோல்வி கிடைக்க முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் மறுபடியும் எய்ம்ஸ் சர்ச்சை பெரிதாகி வரும் நிலையில் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டரைக் கோரியுள்ளது மத்திய அரசு. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் டென்டர் கோரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டருக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 18ம் தேதி கடைசி நாளாகும்.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இங்கு ஏற்கனவே சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டடங்கள் இன்னும் கட்டப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அடித்தளத்தையாவது எழுப்பி விட்டால்தான் பாஜகவுக்கு தர்மசங்கம் தவிர்க்க முடியும் என்பதால் மத்திய அரசு சற்று சுதாரிப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.