மதுரை மக்களுக்கு மற்றுமொரு நற்செய்தி.. துவரிமானில் ரூ. 46 கோடியில் வருகிறது சூப்பர் பாலம்!

Su.tha Arivalagan
Aug 18, 2024,01:10 PM IST

மதுரை: மதுரையில் துவரிமான் பகுதியில் ரூ. 46 கோடியில் பாலம் அமைக்க மத்திய நெடுஞ்சாலைகள் துறை ஒப்புதல் அளித்திருப்பதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக சு. வெங்கடேசன் போட்டுள்ள எக்ஸ் பதிவு:


திண்டுக்கல் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிற இடமாக துவரிமான் - மேலக்கால் சந்திப்பு இருக்கிறது. எனவே துவரிமான் சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலமும் , சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டுமென மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை கடிதம் மூலமும், நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன். 




எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதற்கான நிர்வாக நடைமுறைகளை துவக்கி திட்ட அறிக்கையை தயார் செய்ய கடந்த ஆண்டு அனுமதி வழங்கினார். நிலம் கையகப்படுத்துதல் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து கவனப்படுத்தினோம். மாவட்ட நிர்வாகம் அதனை விரைந்து முடித்துக் கொடுத்தது.


இந்த பின்னனியில் துவரிமான் - மேலக்கால் சந்திப்பில் நான்கு வழிச்சாலையில் மேம்பாலமும், சுரங்கப்பாதையும் அமைக்க ரூ 46.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இது மதுரை மக்களுக்கு கிடைத்துள்ள நற்செய்தி. விபத்துகளின் எண்ணிக்கை மிகவும் குறையும். எனது கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ள மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.