பத்ம விருதுகள் அறிவிப்பு: "ஓஆர்எஸ் கரைசலின் தந்தை" திலீப் மஹளநாபிஸுக்கு பத்மவிபூஷன்!
Jan 26, 2023,10:21 AM IST
டெல்லி: 74வது குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. பத்மவிபூஷன் விருது, மறைவுக்குப் பிந்தையதாக, திலீப் மஹளநாபிஸ் உள்பட 6 பேருக்கு அறிவிக்கப்படடுள்ளது. பிரபல பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்ட 9 பேருக்கு பத்மபூஷன் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓஆர்எஸ் கரைசலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர் திலீப் மஹளநாபிஸ். ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஓஆர்எஸ் கரைசல் மூலம் உயிரிழப்பைத் தடுக்க முடியுமா என்பது குறித்த ஆய்வு நடந்து வந்தது. அந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தவர் மஹளநாபிஸ். அப்போது 1971ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போராட்டம் சூடுபிடித்திருந்தது. அப்போதைய கிழக்கு வங்காளம்தான் இப்போதைய வங்கதேசம்.
அங்குள்ள ஒரு அகதிகள் முகாமில் காலரா பரவியது. பலர் உயிரிழந்தனர். இதையடுத்து மஹளநாபிஸ் கண்டுபிடித்திருந்த ஓஆர்எஸ் கரைசலை அங்கு நோய் பாதித்தவர்களுக்குக் கொடுத்ததில் பலருக்கு நீர்ச்சத்து குறைவது தடுக்கப்பட்டு உயிரிழப்புகளை வெகுவாக தடுக்க முடிந்தது. அன்று முதல் இந்த ஓஆர்எஸ் கரைசல் பிரபலமானது. வயிற்றுப் போக்கு, வாந்தி, காலரா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தற்போது முதலில் கொடுக்கப்படுவது இந்த ஓஆர்எஸ் கரைசல்தான்.
இது நமது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது. இதனால் உயிரிழப்பைத் தவிர்க்க முடியும். காலரா,வயிற்றுப் போக்கு போன்றவை வந்தால் முதலில் இதைத்தான் கொடுப்பார்கள். இந்த கரைசலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர்தான் திலீப் மஹளநாபிஸ். ஓஆர்எஸ் கரைசலின் தந்தையாகவும் போற்றப்படுகிறார் திலீப் மஹளநாபிஸ். இவருக்குத்தான் தற்போது மத்திய அரசு பத்மவிபூஷன் விருது அளித்துக் கெளரவித்துள்ளது.
பத்ம விருதுகள் முழு விவரம்:
பத்மவிபூஷன் (6 பேர்)
பாலகிருஷ்ண தோஷி , ஜாகிர் உசேன், எஸ்.எம்.கிருஷ்ணா, திலீப் மஹளநாபிஸ், ஸ்ரீனிவாஸ் வரதன், முலாயம் சிங் யாதவ்
பத்மபூஷன் (9 பேர்)
எஸ்.எல். பைரப்பா, குமார் மங்கலம் பிர்லா, தீபக் தர், வாணி ஜெயராம், சுவாமி சின்ன ஜீயர், சுமன் கல்யாண்பூர், கபில் கபூர், சுதா மூர்த்தி, கமலேஷ் படேல்.
பத்மஸ்ரீ (91 பேர்)
டாக்டர் சுகமா ஆச்சார்யா, ஜோதயபி பைகா, பிரேம்ஜித் பரியா, உஷா பார்லே, முனீஸ்வர் சந்த்வார், ஹேமந்த் செளகான், பானுபாய் சிதாரா, ஹேமபரோவா சுதியா, நரேந்திர சந்திர தெப்பர்மா, சுதாராதேவி, காதர் வல்லி துடகுலா, ஹேம் சந்திர கோஸ்வாமி, பிரிதிகனா கோஸ்வாமி, ராதா சரண் குப்தா, மொடகு விஜய் குப்தா, அகமது ஹுசேன் - முகம்மது ஹூசேன், தில்ஷாத் ஹூசேன், பிகு ராம்ஜி, சிஐ ஐசக், ரத்தன் சிங் ஜக்கி, பிக்ரம் பகதூர் ஜமாதியா, ராம்குவிவாங்பே ஜெனே, ராகேஷ் ராதேஷியாம் ஜூன்ஜூன்வாலா, ரத்தன் சந்திரா கர், மஹிபாத் கவி, எம்.எம்.கீரவாணி, அரீஸ் கம்பட்டா, பரசுராம் கோமாஜி குனே, கணேஷ் நாகப்பா கிருஷ்ணராஜநாகரா, மகுனி சரன் குனார், ஆனந்த் குமார், அரவிந்த் குமார், டோமர் சிங் கன்வார், ரிஷிங்போர் குர்கலாங், ஹீராபாய் லோபி, மூல்சந்த் லோதா, ராணி மச்சயா, அஜய் குமார் மாண்டவி, பிரபாகர் பானுதாஸ் மன்டே, கஜானன் ஜெகன்னாத் மனே, அந்தர்யாமி மிஸ்ரா, நடோஜா பிந்���ிப்பனஹள்ளி முனிவேங்கடப்பா, டாக்டர் மகேந்திர பால், உமா சங்கர் பாண்டே, ரமேஷ் பர்மர் - சாந்தி பர்மர், நளினி பார்த்தசாரதி, ஹனுமந்தராவ் பசுபலேட்டி, ரமேஷ் படாங்கே, கிருஷ்ண படேல், கல்யாணசுந்தரம் பிள்ளை, அப்புக்குட்டன் போத்வால், கபில் தேவ் பிரசாத், எஸ்.ஆர்.டி. பிரசாத், ஷா ரஷீத் அகமது குவாத்ரி, சி.வி.ராஜு, பக்ஷி ராம், செருவயல் ராமன், சுஜாதா ராமதுரை, அப்பாரெட்டி நாகேஸ்வர ராவ், பரேஷ்பாய் ரத்வா, ராமகிருஷ்ண ரெட்டி, மங்களா காந்தி ராய், ரன்ரெம்சங்கி, வடிவேல் கோபால் - மாசி சடையன், மனோரஞ்சன் சாஹு, பதாயத் சாலு, ரித்வ் சன்யால், கோடா சச்சிதானந்த சாஸ்திரி, சங்குராத்திரி சந்திரசேகர், சானதோய்பா சர்மா, நேக்ராம் சர்மா, குர்சரண் சிங், லட்சுமண் சிங், மோகன் சிங், தோனாஜாம், பிரகாஷ் சந்திரசூட், நெய்ஹுனுவோ, ஜனும் சிங் சோய், குஷாக் திக்சே நவாங் சம்பா ஸ்டான்சின், சுப்பராமன், மாவோ சுபாங், பாலம் கல்யாணசுந்தரம், ரவீன ரவி தாண்டன், விஸ்வநாத் பிரசாத் திவாரி, தனிராம் டோட்டோ, துலா ராம் உப்ரெட்டி, கோபால்சாமி வேலுச்சாமி, ஈஸ்வர் சந்தர் வெர்மா, கூமி நாரிமன் வாடியா, கர்மா வாங்சு, குலாம் முகம்மது ஜாஸ்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடத்தப்படும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும். விருது வழங்கும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.