முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரதரத்னா

Su.tha Arivalagan
Feb 09, 2024,05:57 PM IST

டெல்லி: முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், செளத்ரி சரண் சிங் மற்றும் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளது இதுவரை இந்தியாவில் நடந்திராத நிகழ்வு. ஏற்கனவே பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் பீகார் முதல்வர் கற்பூரி தாக்கூர் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.




பி.வி.நரசிம்ம ராவ், செளத்ரி சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரதரத்னா விருது அளிக்கப்படும் தகவலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.  வருடத்திற்கு அதிகபட்சம் 3 பாரதரத்னா விருதுகள்தான் வழங்கப்படும். ஆனால் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக 5 பேருக்கு இந்த விருது அளிக்கப்படவுள்ளது


இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டிவீட்டுகளில் கூறியுள்ளதாவது:


சரண் சிங்


முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்குக்கு பாரதரத்னா விருது அளிக்கவிருப்பது எங்களது அரசுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். அவர் நாட்டுக்கு அளித்த ஒப்பிட முடியாத பங்களிப்புக்காக இந்த விருது அளிக்கப்படுகிறது. தனது வாழ்க்கை முழுவதையும் விவசாயிகளுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் அர்ப்பணித்தவர் சரண் சிங்.  உத்தரப் பிரதேச முதல்வராகவும்,  நாட்டின் உள்துறை அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், நாட்டு நலனுக்காக பாடுபட்டவர் சரண் சிங்.


அவசர நிலை காலத்துக்கு எதிராக உறுதியாக நின்றவர் சரண் சிங். நமது விவசாய சகோதர, சகோதரிகளுக்காக பாடுபட்டவரும், ஜனநாயகத்திற்காக போராடியவருமான அவருக்கு பாரதரத்னா விருது அளிப்பதை பெருமையாக கருதுகிறேன்.


பி.வி.நரசிம்ம ராவ்


சிறந்த அறிஞராகவும், தலைவராகவும் விளங்கியவர் பி.வி.நரசிம்ம ராவ். பல்வேறு பொறுப்புகளில் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், எம்.பி.யாகவும், எம்எல்ஏவாகவும், பிரதமராவும் சிறப்பாக செயல்பட்டவர். அவரது தொலைநோக்குப் பார்வைதான், இந்தியா பொருளாதார ரீதியில், முன்னேறிய நிலைக்குச் செல்ல காரணம். நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த அடித்தளம் அமைக்கவும் அது உதவியது.


பிரதமராக நரசிம்ம ராவ் இருந்த காலத்தில்தான் இந்தியா பொருளாதாரத்தில் உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. புதிய பொருளாதார வளர்ச்சி இவரது காலத்தில்தான் உருவானது.  இந்திய வெளியுறவுத்துறைக் கொள்கையிலும் சிறந்த பங்காற்றியுள்ளார் நரசிம்ம ராவ்.


எம்.எஸ். சுவாமிநாதன்


நாட்டின் விவசாயத்துறைக்கும், விவசாயிகள் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, அளப்பறிய சேவைகளைச் செய்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரதரத்னா விருது அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயத்துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கு அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.  இந்திய விவசாயத்துறை நவீனமடைவதற்கும் அவர் உதவியுள்ளார் என்று கூறியுள்ளார் பிரதமர் நரசிம்ம ராவ்.


மறைந்த சரண் சிங், 1902ம் ஆண்டு உ.பி. மாநிலம் மீரட்டில் பிறந்தவர். நாட்டின் பிரதமராக 1979ம் ஆண்டு ஜுலை 28ம் தேதி முதல் 1980ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வரை பதவி வகித்தார். ஜனதாக் கட்சியின் சார்பில் அவர் பிரதமராக பதவி வகித்தார். உத்தரப் பிரதேச முதல்வராகவும் 2 முறை அவர் பதவி வகித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.வி நரசிம்ம ராவ், பிரதமர் பதவிக்காலத்தை முழுமையாக வகித்த, நேரு குடும்பத்தைச் சேராத முதல் காங்கிரஸ் பிரதமர் என்ற பெருமையைக் கொண்டவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில்தான் இந்தியா பொருளாதார மறுமலர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தது. நரசிமம ராவ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக மன்மோகன் சிங் செயல்பட்டார்.


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் சிறப்பாக செயலாற்றியவர் பி.வி. நரசிம்மராவ் என்பது குறிப்பிடத்தக்கது