பேனா நினைவுச் சின்னம் : 15 நிபந்தனைகளுடன் அனுமதி.. எதிர்ப்போம் என சீமான் அறிவிப்பு!

Aadmika
Apr 29, 2023,11:33 AM IST
டெல்லி : கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதை சட்ட ரீதியாக எதிர்க்கப் போவதாக நாம் தமிழர் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிந்து வந்தனர். இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில், பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசிற்கு, தமிழக அரசு கோரிக்கை மனு அளித்திருந்தது.



தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்ற மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மொத்தம் 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்காக எந்த நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் விதிக்கப்பட்டுள்ளது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பேனா சின்னம் அமைப்பதற்கு ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், இதற்கு நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளது. இந்த நிலையில்  நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தப்போவதாக சீமான் தெரிவித்துள்ளார்.