கனடா வாழ் இந்தியர்களே கவனமா இருங்க.. அரசு அறிவுறுத்தல்

Su.tha Arivalagan
Sep 20, 2023,03:38 PM IST

டெல்லி: கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுவதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.


காலிஸ்தான் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவிலும் விரிசல் விழுந்துள்ளது. இந்தியத் தூதரக அதிகாரியை கனடா அரசு வெளியேற்றி உத்தரவிட்டது. அதற்குப் பதிலடியாக கனடா தூதரக அதிகாரி ஒருவரை வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.




இந்த நிலையில் காஷ்மீருக்குச் செல்வதை கனடா நாட்டவர்கள் தவிர்க்குமாறு அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்தது. இதற்குப் பதிலடியாக தற்போது இந்தியாவும் ஒரு அட்வைசரியை பிறப்பித்துள்ளது. அதன்படி கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுவதால் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தியர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில், கனடாவில் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பபடுகிறது. அரசியல் ரீதியிலான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.  இந்தியர்களுக்கு எதிரான செயல்கள் அதிகரித்து வருவதால், அங்குள்ள இந்திய மக்கள், அங்கு சுற்றுலா செல்வோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


சமீபத்தில் இந்தியத் தூதர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இந்தியாவுக்கு எதிரான போக்குடன் செயல்படும் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவான போக்கும் காணப்படுகிறது.  எனவே இதுபோன்ற செயல்கள் நடைபெறும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.


இந்தியர்களின் நலன் குறித்து கனடா அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். தற்போது நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக இந்திய மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதரகத்திலும், டொரன்டோ, வான்கூவரில் உள்ள துணைத் தூதரகங்களில் இந்திய மாணவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். எதிர்பாராத, அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நேரிட்டால் உதவி செய்ய இது தோதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.