நெருங்கி வரும் லோக்சபா தேர்தல்.. நாடு முழுவதும்.. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு!
டில்லி : பெட்ரோல், டீசல் விலையை நாடு முழுவதும் லிட்டருக்கு ரூ.2 மத்திய அரசு குறைத்துள்ளதாக மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக லிட்டருக்கு ரூ.2 குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு மார்ச் 15ம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர், நாட்டின் புகழ்பெற்ற பிரதமரான நரேந்திர மோடி, கோடிக் கணக்கான இந்தியர்களை தன்னுடைய குடும்பமாக நினைத்து, அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளார். அவர்கள் வசதியாக வாழ்வதே தன்னுடைய அரசின் நோக்கம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மார்ச் 14ம் தேதி நிலவரப்படி இந்திய ரூபாய் மதிப்பில் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.94 ஆகும். ஆனால் இத்தாலியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.168, அதாவது இந்தியாவை விட 79 சதவீதம் அதிகம். பிரான்சில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.166.87. அதாவது இந்தியாவை விட 78 சதவீதம் அதிகம்.
ஜெர்மனியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.159.57. அதாவது இந்தியாவை விட 70 சதவீதம் அதிகம். ஸ்பெயினில் ரூ.145 க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. அதாவது இந்தியாவை விட 54 சதவீதம் அதிகம். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதற்கு காரணம் வாடிக்கையாளர்கள் அதிக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான். இந்தியாவில் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக வாகனங்கள் டீசலை பயன்படுத்துகின்றன. 6 கோடி கார்களும், 27 கோடி இருசக்கர வானங்களும் பயன்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில்தான் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 100 குறைக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம். மகளிர் தினத்தன்று இந்த விலைக் குறைப்பை பிரதமர் நரேந்திர மோடியே வெளியிட்டார்.