வேகமாக பரவி வரும் ஜிகா வைரஸ்.. கர்ப்பிணிகள் கவனம்.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Meenakshi
Jul 04, 2024,05:03 PM IST

புதுடெல்லி:   மகாராஷ்டிராவில் 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய  சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்களின் மூலமாக பரவி வருவது தான் ஜிகா வைரஸ். இந்த ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் உடலில் இருக்கும். பாதிப்பு ஏற்பட்டு 3 அல்லது 7 நாட்களுக்கு பிறகு தான் உடலில் அறிகுறிகள் காணப்படும். காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். 


இதுவரை இந்த நோய் தொற்றிற்கு எந்த வித தடுப்பூசியும் கண்டு பிடிக்கப்படவில்லை. முதன்முதலில் இந்த வைரஸ் 2016ம் ஆண்டு குஜராத்தில் கண்டறியப்பட்டது.  இதன்பிறகு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது.




அதிக ஓய்வு, திரவ உணவுகளை சாப்பிடுவது, உடல்வலி, காய்ச்சலுக்கான மருந்துகள் மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். கொசுக்கடி மூலம் இந்நோய் பரவுவதால் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பாத்து கொண்டால் இந்நோயில் இருந்து தப்பிக்கலாம். இந்த  ஜிகா வைரஸ் கர்ப்பிணி பெண்களை தான் அதிகளவில் தாக்கும். கர்ப்பிணியை பாதிப்பதன் மூலம் வயிற்றில் இருக்கும் சிசுவம் பாதிக்கப்படும் என்பதால் மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது மத்திய அரசு.


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 கர்ப்பிணிகள் உட்பட 8 பேருக்கு இந்த வைரஸ் தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதாரச் சேவைகள் துறை இயக்குனர் அருள் கோயல் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த வைரஸ் கர்ப்பிணி பெண்களை அதிகம் பாதித்தால், வயிற்றில் இருக்கும் சிசுவும் பாதிக்கப்படும் என்பதால் மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 


பாதிக்கப்பட்ட அல்லது அதற்கு அருகில் உள்ள இடங்களில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். இதில் பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு கரு வளர்ச்சி கண்காணிக்கவும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஏடிஎஸ் கொசுக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த இதற்கான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.