வங்கிக் கடன் மோசடி.. நடிகர் விஷால் தங்கை கணவர் உம்மிடி கிரிட்டிஷ் மீது.. சிபிஐ வழக்கு
சென்னை: நடிகர் விஷாலின் தங்கை கணவரான பிரபல நகைக்கடை அதிபர் உம்மிடி கிரிட்டிஷ் மீது வங்கி கடன் மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டிக்கும் பிரபல நகைக்கடை உரிமையாளர் உம்மிடி கிரிட்டிஷுக்கும் திருமணம் நடைபெற்றது.
நடிகர் விஷாலின் தங்கை கணவர் கடந்த ஆண்டு சென்னை ஐயப்பன் தாங்கல் எஸ்பிஐ வங்கிக் கிளையில் போலியான ஆவணங்கள் மூலம் சுமார் 5.5 கோடி ரூபாய் கடன் பெற உடந்தையாக இருந்ததாக கூறி சிபிஐக்கு புகார் வந்தது. உம்மிடி கிரிட்டிஷ் தவிர வங்கி அதிகாரிகள் உள்பட பலர் மீதும் புகார் கூறப்பட்டது. ஆனால் இதுதொடர்பான மேல் நடவடிக்கை ஏதும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உம்மிடி கிரிட்டிஷ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. நில உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர், வங்கி அதிகாரிகள், கடன் வாங்கியவர்கள் என மொத்தம் ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய பாரம்பரியமான நகைத் தயாரிப்பாளர்களில் உம்மிடி பங்காரு செட்டிக்கு முக்கிய இடம் உண்டு. வேலூர் அருகே சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரான உம்மிடி பங்காரு செட்டி நகைத் தொழிலில் சிறந்து விளங்கினார். சிறிய அளவில் தொழில் செய்து வந்த அவர் சென்னைக்கு இடம் பெயர்ந்த பின்னர் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டார். 123 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது முதல் நகைக் கடை கோவிந்தப்பன் நாயக்கன் தெருவில் தொடங்கப்பட்டது.
நமது நாடு சுதந்திரமடைந்தபோது மவுன்ட்பேட்டனிடம் கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட செங்கோலை, உம்மிடி பங்காரு செட்டி நிறுவனம்தான் தயாரித்துக் கொடுத்தது. திருவாவடுதுறை ஆதீனத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த செங்கோலை அவர்கள் தயாரித்துக் கொடுத்தனர். இந்த செங்கோல்தான் தற்போது புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செங்கோலைத் தயாரித்துக் கொடுத்த பாரம்பரியமான குடும்பத்தின் 5வது தலைமுறை நகைத் தொழில் அதிபர்தான் உம்மிடி கிரிட்டிஷ் என்பது குறிப்பிட்டத்தக்கது.