"லஞ்சம்".. சென்சார் போர்டு மீது விஷால் கொடுத்த புகார்..  சிபிஐ விசாரணை

Su.tha Arivalagan
Oct 05, 2023,02:01 PM IST
மும்பை: மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் கூறிய புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கைவண்ணத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிக்க உருவான வெற்றிப் படம்தான் மார்க் ஆண்டனி. தமிழில் பட்டையைக் கிளப்பிய இந்தப் படம் இந்தியிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் செப்டம்பர் கடைசியில் இந்தியில் வெளியானது. 



படம் வெளியான நிலையில் நடிகர் விஷால் பரபரப்பான ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் மார்க் ஆண்டனி இந்திப் பதிப்பு படத்தைப் பார்க்கவும், சான்றிதழ் தரவும் தான் ரூ. 6.5 லட்சம் பணம் கொடுத்ததாக கூறி அதிர வைத்தார். மேலும் யாருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்ற விவரத்தையும் அவர் வங்கிக் கணக்கு விவரத்தோடு வெளியிட்டார்.

இது தேசிய அளவில் திரைத் துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இப்போது இந்த விவகாரத்தை சிபிஐ கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கில் விஷால் குற்றம் சாட்டிய இரண்டு நபர்கள் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட மேனகா என்ற பெண் உள்ளிட்டோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்சார் போர்டைச் சேர்ந்த சில அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.