தீவிரம் அடையும் காவிரி.. அடம்பிடிக்கும் கர்நாடகா.. அப்பீலுக்குத் தயாராகும் தமிழகம்

Aadmika
Aug 30, 2023,10:30 AM IST
டெல்லி : தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும் படி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் தண்ணீர் திறக்க கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருவதால், காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு 5000 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.  



ஆனால் தமிழகத்திற்கு 5000 கனஅடி காவிரி நதிநீர் திறப்பது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவு குறித்து முதல்வர் சித்தராமையா மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதற்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.ஏ.சிவக்குமார் தெரிவித்தார். 

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகா தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால் சுப்ரீம் கோர்ட்டை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 01 ம் தேதி காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.