பெங்களூரில் பந்த்.. டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்
டெல்லி: பெங்களூரில் பந்த் நடக்கிற பரபரப்பான சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று பெங்களூரில் பந்த் நடப்பது குறிப்பிடத்தக்கதாகும். கர்நாடகாவில் இருந்து தமிழகத்தில் காவிரி நீர் வருவது தொடர்பான பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் வருகின்ற 29ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கூடாது என கர்நாடகா பாஜக, ஜேடிஎஸ், ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணிக்கு காணொளி வாயிலாக நடந்த கூட்டத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமை வகித்தார்.
தமிழ்நாட்டுக்கு கர்நாடகா 12500 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றுள்ளார்.