கேஷ் ஆப் நிறுவனர் பாப் லீ கத்தியால் குத்திக் கொலை.. சான் பிரான்சிஸ்கோவில் பயங்கரம்

Su.tha Arivalagan
Apr 06, 2023,10:49 AM IST
சான்பிரான்சிஸ்கோ:  கேஷ் ஆப் என்ற மொபைல் கட்டணம் செலுத்தும் ஆப்பை உருவாக்கியவரான பாப் லீ கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். சான்பிரான்சிஸ்கோவில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.35 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு நபர் கத்தியால்  குத்தப்பட்ட நிலையில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பாப் லீயை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



அதன் பின்னர் நடந்த விசாரணையில்தான் இறந்தவர் பாப் லீ என்று தெரியவந்தது.  பாப் லீ தற்போது கிரிப்டோ கரன்சி நிறுவனமான மொபைல்காய்ன் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக இருந்து வந்தார்.  பாப் லீயைக் கொன்றது யார் என்று தெரியவில்லை. இதுவரை அதுகுறித்த தகவல்களை போலீஸார் வெளியிடவில்லை.

பாப் லீ மிகவும் நல்ல மனிதர் என்று அவரது நிறுவன ஊழியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்பு கூகுள் நிறுவனத்திலும் பாப் லீ வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.