முஸ்லீம் பெண்களை புர்காவை கழற்றச் சொன்ன.. பாஜக வேட்பாளர் மாதவி லதா.. போலீஸ் வழக்கு!

Meenakshi
May 13, 2024,05:46 PM IST

ஹைதராபாத்: ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.


மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கின்றது. அதில் இன்று 4ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 96 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடந்தது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன்  வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக்  கடமையை ஆற்றி வருகின்றனர். 


இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் தொகுதியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் பர்தாவை தூக்கச் சொல்லியும், ஆதார் கார்டை கேட்டும் பரிசோதனை செய்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த  இஸ்லாமிய பெண்களின் முகத்தை பார்த்த பின்னரே வாக்களிக்க மாதவி லதா அனுமதித்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது, 5 பிரிவுகளின் கீழ் ஹைதராபாத் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.




இதற்கு முன்னர் பிரச்சாரத்தின்போது பழைய ஹைதராபாத்தில் உள்ள சித்தியம்பர் பஜார் சந்திப்பு அருகே நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அப்போது, திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த மாதவி லதா, அங்குள்ள மசூதியை நோக்கி வில்அம்பு ஏவுவது போல செய்கை செய்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பர்தாவை தூக்கச் சொல்லி முகத்தை பார்த்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.