உருட்டுக்கட்டைகளுடன் சட்டவிரோதமாக வீட்டில் கூட்டம் சேர்த்ததாக.. சீமான் மீது.. 4 பிரிவுகளில் வழக்கு

Manjula Devi
Jan 24, 2025,11:14 AM IST

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பெரியார் குறித்த விமர்சனத்திற்கு எதிராக, பெரியாரிய அமைப்பினர் சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்ற போது சீமானின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டு முன்பு உருட்டு கட்டையுடன் திரண்டதால், சீமான் மற்றும் சீமான் ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி கடுமையாக பேசியிருந்தார் இதனால் பெரியார் அமைப்பாளர்கள் சீமானின் நாகரீகமற்ற பேச்சிற்கு ஆதாரம் கேட்டு கடந்த 22 ஆம் தேதி அவரது வீட்டை முற்றுகையிட இருப்பதாக அறிவித்திருந்தனர். 




இந்த அறிவிப்பின்படி நேற்று முன்தினம்  பெரியாரின் திக, திவிக மற்றும் மே 17 இயக்கங்கள் கொண்ட அமைப்பினர் சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்று ஒன்று திரண்டனர். அப்போது சீமானின் உருவ பொம்மையை எரித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதனால் பாதுகாப்பு கருதி 700 க்கும் மேற்பட்ட போலீசார் சீமானின் வீட்டு முன்பு குவிந்தனர். போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறியும் சிலர் சீமானின் வீட்டிற்குள் செல்ல முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். அதற்கு முன்னதாக சீமானின் ஆதரவாளர்கள் பெரியார் அமைப்பினரை தாக்க உருட்டு கட்டையுடன் அப்பகுதியில் இருந்ததால் பதற்றம் நிலவியது.


தற்போது போராட்டக்காரர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல தற்போது சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சீமானுக்கு ஆதரவாக அவரது வீட்டில் உருட்டு கட்டையுடன் வந்த 150 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் மீது போலீசார் மிரட்டுதல் ,சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


சீமானுக்குப் பாதுகாப்பு தருவதற்காக ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் சீமான் வீட்டின் முன்பு திரண்டிருந்தனர். அதில் பலர் கையில் உருட்டுக்கட்டையுடனும் இருந்தனர். அவர்களுக்கு சீமான் வீட்டிலேயே பிரியாணி சமைத்துப் போடப்பட்டது. தொண்டர்களுடன் சேர்ந்து சீமான், அவரது மனைவி கயல்விழி உள்ளிட்டோரும் பிரியாணி சாப்பிட்டனர். அவர்களில் பலர் பாட்டும் பாடி வீடே களை கட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்