சியாச்சின் பனிச் சிகரத்தின் உச்சியில்.. பாதுகாப்புப் பணியில்.. முதல் பெண் ராணுவ அதிகாரி!

Su.tha Arivalagan
Jan 04, 2023,08:50 AM IST
ஸ்ரீநகர்:  சியாச்சின் பனிச்சிகரத்தின் உச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார் கேப்டன் ஷிவா செளகான். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள முதல் இந்திய பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

உலகின் மிக உயர்ந்த போர்க்களம் என்ற பெயர் பெற்றது சியாச்சின் பனிச்சிகரம். இந்த சிகரத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்திய, பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது மோதிக் கொண்டு வந்தன. தற்போது இந்த சிகரம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. 



இந்த பகுதியில்தான் தற்போது பெண் ராணுவ அதிகாரியாக ஷிவா தனது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். சியாச்சின் பனிச் சிகரத்தில் 15,600 அடி உயரத்தில் இருக்கும் குமார் போஸ்ட் பகுதியில்தான் அவர் பணியில் ஈடுபட்டுள்ளார்.  3 மாதங்கள் அவர் இங்கு பணியில் இருப்பார். இதற்காக அவர் தீவிர பயிற்சியும் பெற்று அதன் பிறகே இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு போர்த்தடவாள பொறியியில் சாதனங்களைக் கொண்டு செல்லும் படையணியின் கேப்டனாக ஷிவா செயல்படுகிறார்.  ஆண் அதிகாரிகளுடன் இணைந்து சியாச்சின் போர்க்கள பள்ளியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு அதில் தேறிய பிறகே ஷிவாவுக்கு சியாச்சின் பணி கிடைத்தது. இந்த பயிற்சிகள் அனைத்துமே பனியை அடிப்படையாக வைத்து நடக்கும். கடுமையானவை, கஷ்டமானதும் கூட.  அதில் தேறித்தான் தற்போது புதிய கெளரவத்தைப் பெற்றுள்ளார் ஷிவா செளகான்.

முன்பு அதிகபட்சமாக சியாச்சின் தரை முகாமில்தான் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அது தரையிலிருந்து 9000 அடி உயரத்தில் உள்ளது.  அதற்கு மேல் உள்ள முகாம்களுக்கு பெண் அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை. அதைத்தான் தற்போது தகர்த்துள்ளார் ஷிவா செளகான்