விடாமல் வெளுத்த கன மழை.. மிதக்கும் டெல்லி.. விமான சேவை கடும் பாதிப்பு

Manjula Devi
Jun 28, 2024,12:16 PM IST
டில்லி: டெல்லியில்  திடீரென நேற்று மாலை முதல்  பெய்த கனமழையால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தலைநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.

கடந்த கடந்த சில வாரங்களாகவே டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான வெயில் தாக்கம் நிலவி வந்தது. கூடவே வெப்ப அலையும் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.  நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. சுமார் 3 மணி நேரத்தில் 15 சென்டிமீட்டர் மழை பதிவானது. தலைநகர் டெல்லியில் பெய்த திடீர் மழையால் டெல்லி மாநகரமே ஸ்தம்பித்தது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 



குறிப்பாக தவுலாகான், மோதிபாத் சாந்தி பாத், சப்தர்ஜங் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

டெல்லியில் பரவலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்த எதிரொலியால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து அருகில் இருந்த வாகனங்கள் மீது விழுந்தது . இதில் 3 பேர் உயிரிழந்தனர்.  விமான நிலையத்தின் மேற்கூரை பகுதி சரிந்து விழுந்ததால் பயணிகள் விமான நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விமான நிலையத்தின் முதல் டெர்மினல் வரை மதியம் 2 மணி வரை இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்ற விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

பல இடங்களில் அளவு மழை நீர் வெள்ளம் போல தேங்கி இருப்பதால்  மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் டெல்லி முழுவதும் பரவலாக சூறைக்காற்றுடன் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.