ரேஷன் கடைகளில்.. பிரதமர் படங்களை வைக்க முடியாது.. கேரள முதல்வர் பினராயி விஜயன்

Meenakshi
Feb 13, 2024,06:00 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை வைக்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


இந்தியா முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின்  படத்தினை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு வரும் அரிசி மானியமாக மத்திய அரசால் கொடுக்கப்படுவதால் தான் பிரதமர் படம் வைக்க பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.




இந்நிலையில் கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளின் முன்னர் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்க வேண்டும் என்று மாநில உணவுத்துறை செயலருக்கு, மத்திய உணவுத்துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து கேரளா சட்டசபையில் பேசிய அமைச்சர் ஜி.ஆர்.அனில் பேசுகையில், 14,000 ரேஷன் கடைகளில் பிரதமர் புகைப்படமும், 550 ரேஷன் கடைகளில் பிரதமன் செல்ஃபி பாயின்ட்களை நிறுவவும் அறிவுறுத்தல் வந்துள்ளது என்றார்.


இது குறித்து ஐ யூ எம் எல் அப்துல் ஹமீது எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பிரனாயி விஜயன். மத்திய அரசின் உத்தரவை ஏற்கப்போவதில்லை. இது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு யுத்தியாகவே நாங்கள் பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.