கேன்ஸ் பட விழாவில் வரலாறு படைத்த அனுசுயா செங்குப்தா.. சிறந்த நடிகை விருது பெற்று அசத்தல்!
கேன்ஸ்: பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெறும் திரைப்பட விழாவில் இந்தியாவைச் சேர்ந்த அனுசுயா செங்குப்தா புதிய வரலாறு படைத்தார். சிறந்த நடிகைக்கான விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகை அனுசுயா என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கேரிய இயக்குநர் கான்ஸ்டான்டின் போஜனோவ் இயக்கிய Shameless என்ற படத்தில் நடித்தமைக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இது ஒரு பாலியல் தொழிலாளி குறித்த கதையாகும். டெல்லியில் உள்ள பிராத்தல் மையத்திலிருந்து ஒரு பாலியல் தொழிலாளி தப்பிக்கிறார். காவலர் ஒருவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி வரும் அவர் எங்கு செல்கிறார், அவர் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதுதான் கதையாகும்.
இந்தப் படத்தில் அனுசுயா மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இந்த நடிப்புக்காகத்தான் தற்போது அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை உலகம் முழுவதும் வாழும், சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அனுசுயா செங்குப்தா தெரிவித்துள்ளார்.
கேன்ஸ் பட விழாவில் வழங்கப்படும் சிறந்த நடிகை விருதை இதுவரை இந்தியர்கள் யாரும் வென்றதில்லை. அந்த வகையில் அனுசுயா புதிய வரலாறு படைத்துள்ளார்.
கோவாவில் வசித்து வரும் அனுசுயா செங்குப்தா அடிப்படையில் புரடக்ஷன் டிசைனர் ஆவார். மும்பையில் பணியாற்றி வந்த அவர் எப்போதாவதுதான் நடிப்பார். நெட்பிளிக்ஸில் இடம் பெற்ற மசாபா மசாபா ஷோவை இவர்தான் டிசைன் செய்திருந்தார். கொல்கத்தாவைப் பூர்வீகமாகக் கொண்ட அனுசுயா, அஞ்சன் தத் இயக்கிய மேட்லி பெங்காலி படம் மூலம் 2009ல் நடிகையாக மாறினார். பின்னர மும்பைக்குச் சென்று அங்கு திரைப்படங்களில் பணியாற்ற ஆரம்பித்தார்.