விதம் விதமாக "ரீல்" விடும் அரசியல்வாதிகள்.. காலம் மாறிப் போச்சே.. இனி இப்படித்தான்!
சென்னை: காலம் மாறிப் போச்சு.. தேர்தல் பிரச்சாரக் களமும், உத்திகளும் கூட இப்போது மாறிப் போய்ருச்சு. விதம் விதமான புது டெக்னிக்குகளை பிரச்சாரத்தில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் அரசியல்வாதிகள்.
தமிழ்நாட்டில், தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் வேட்பாளர்கள் மக்களிடம் வாக்கு சேகரிக்க மேடை பேச்சுகளும் மற்றும் வீடு வீடாக வந்து மக்களை சந்தித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்கள். இதனால் ஊரே பரபரப்பாக பிசியாக இருக்கும். ஊரையே ஒன்று திரட்டி வாக்குகள் சேகரிப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் எல்லாருக்கும் செம கிராக்கி இருக்கும். அவர்களைத் தேடித் தேடி வருவார்கள் தலைவர்கள்.
பரபரப்பிற்கும் பஞ்சமிருக்காது. மக்கள் அனைவரும் தேர்தல் காலம் என்றாலே அன்றையகாலத்தில் செய்தித்தாள்களையும், வார மற்றும் மாத இதழ்களையும் ஏன் தொலைகாட்சிகளில் செய்திகள் மூலம் அறிவர். ஆனால் "அந்த காலம் அது அது... வசந்த காலம்"... இப்போது வேற லெவலுக்கு மாறி விட்டது பிரச்சாரம். செல்போன்களும், சோசியல் மீடியாவும் இன்று முக்கிய ஊடகமாக மாறியுள்ளது.
உலகத்தையை கைக்குள் அடக்கும் செல்போன் காலம் இது. சமுக வலைதளங்கள் கோலோச்சும் காலம் இது.. மழலை முதல் பெரியவர்கள் வரை இதில்தான் குவிந்து கிடக்கிறார்கள். எந்தப் பக்கம் போனாலும் ரீல்ஸ்கள்தான் சுற்றிக் கொண்டுள்ளன. இந்த ரீல்ஸ்களைத்தான் தற்போது அரசியல் கட்சிகளும் கையில் எடுத்துள்ளன. தங்களது தலைவர்களின் பேட்டிகள், பேச்சுக்கள், முக்கிய அம்சங்களை ரீல்ஸ்களாக மாற்றி சுற்றி விட்டு வருகின்றனர்.
தற்போது உள்ள அரசியல்வாதிகள் தங்கள் வாக்குகளை சேகரிக்க சமுக வலைதளத்தையே அதிகம் விரும்புகின்றனர். மக்களிடம் வாக்குகளை சேகரிக்க இது ஈஸியாகவும் இருக்கிறது.. ஏதாவது ஒரு வீடியோ வைரல் ஆனால் அது பிளஸ் பாயிண்ட் ஆகி விடுகிறது. இது போக விதம் விதமான காமெடிகளையும் வேட்பாளர்கள் அரங்கேற்றுகிறார்கள்.
வேட்பாளர்கள் சிலர் தையல் மிஷினில் உட்கார்ந்து தைத்துக் கொடுத்து அக்கா ஓட்டுப் போடுங்க.. அம்மா ஓட்டுப் போடுங்க என்று கேட்கின்றனர். ஒரு வேட்பாளர், நாமக்கல் பக்கம் பிரச்சாரம் செய்தபோது, கோழிப் பண்ணைக்குள் புகுந்து முட்டைகளை சேகரித்துக் கொடுத்து வாக்கு சேகரித்தார். டீ கடையில் டீ விற்பது, காய்கறி விற்பது என்று முன் கூட்டியே ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து விட்டு, பிரச்சாரக் களத்திற்கு வருகின்றனர்.
மக்களை கவரவும் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையிலும் இப்போது வாக்குகள் சேகரிக்கின்றனர். டிரெண்டிங்கிலும் இடம் பெறுகின்றனர்... வேட்பாளர்கள் ஒரு பக்கம் இப்படி கலகலப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். மக்களுக்கும் ஏப்ரல் 17ம் தேதி வரை செம பொழுதுபோக்காகவே இருக்கும். இன்னிக்கு எந்த வேட்பாளர்.. என்ன கூத்து பண்ணப் போறாரோன்னுதான் மக்கள் ஜாலியாக காத்திருக்கிறார்கள்.. அப்படியே 19ம் தேதி மறக்காம ஓட்டையும் போட்ருங்க.. ஏன்னா.. அது உங்களது தலைவிதியை நிர்ணயிக்க நீங்களே எழுதும் தீர்ப்பு.. எனவே மறக்காமல் அந்தக் கடமையை செஞ்சுருங்க.
கட்டுரை: சுஜித்ரா