இறுதியாக 1085 வேட்பாளர்கள்.. யாரெல்லாம் வாபஸ் பெறப் போகிறார்கள்.. நாளை கடைசி நாள்!

Meenakshi
Mar 29, 2024,01:36 PM IST

சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வேட்பு மனு முடிந்த நிலையில், 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 664 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நாளை மாலைக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அதன் பின்னர் இறுதி பட்டியல் நாளை மாலை வெளியிடப்படும்.


மக்களவை தேர்தலுக்கான தேர்தல் தேதி ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல்  20ம் தேதி தொடங்கி 27ம் தேதியுடன் முடிந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும்,  1749 வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 1487 ஆண்கள், 233 பேர் பெண் வேட்பாளர்கள். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 72 பேரும், குறைந்த பட்சமாக சிதம்பரத்தில் 17 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடப்பதால், அந்த தொகுதியில் போட்டியிட 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆண் வேட்பாளர்கள் 12 பேரும், பெண் வேட்பாளர்களும் 10 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.




நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. அதன் இறுதியில், 664 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 1085 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, வேட்புமனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்கள் 30ம் தேதி மாலை 3 மணிக்குள் வாபஸ் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.


நாளை மாலை 3 மணி வரை வாபஸ் வாங்கலாம். அதன் பின்னர் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்ற இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.